வேலைக்குச் சேர்ந்து கட்டாயம் செய்யவேண்டிய விஷயங்கள்!

வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கழித்துத்தான் பணி நிரந்தரம் என்பது இன்றைக்கு பெரும்பாலான கம்பெனிகளில் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. பணியாளரின் தகுதி, அவரது வேலைத்திறன் நிறுவனத்துக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதையெல்லாம் ஆராயக் கட்டாயம் ஒரு ஆண்டு காலமாவது தேவைப்படுகிறது. இதில் 15 நாட்கள் ஒருவரது வேலைத்திறனை அப்ரைசல் செய்ய போய்விடும் என்பதால், மீதமுள்ள 350 நாட்களில் ஒரு பணியாளரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

 

1. கலாசாரத்துக்குப் பழகுங்கள்!

கல்லூரியிலிருந்து படித்து முடித்துவிட்டு ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருப்பீர்கள். கல்லூரியில் உங்களது உடை நாகரீகம், நண்பர்களுடனான உரையாடல்கள் எல்லாம் இயல்பாக இருந்திருக்கும். ஆனால், வேலைக்குச் சேர்ந்தபின் அந்த அலுவலக கலாசாரத்துக்கேற்ப உடை, பழகும் விதம், சிந்திக்கும் நெறிமுறைகள் என எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது அவசியம். மிஸ்டர் போட்டு பெயர் சொல்லி அழைக்கிற ஆபிஸில் சார் போட்டால் தப்பு. வாட்ஸ் அப் பயன்படுத்தும் அலுவலகத்தில் மெயிலில் பதில் போட்டால் தப்பு. ஷார்ட்ஸ் போட்டுவரலாம் என்றாலும் பேன்டுடன் போவது தப்பு. இப்படி பல விஷயங்களில் அலுவலக நாகரீகத்துக்கு ஏற்ப மாறவில்லை எனில், மந்தையிலிருந்து காணாமல் போன வெள்ளாடுகள் போல தனித்து நிற்போம். இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவாது.

 

2. இருமடங்கு வேகத்துக்குத் தயாராகுங்கள்!

அலுவலகத்தில் சேர்ந்த ஒரு வாரத்துக்குத்தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் என்கிற சலுகை கிடைக்கும். அதற்குள் உங்களிடமிருந்து அதே அலுவலகத்தில் அனுபவமுள்ள ஊழியர் செய்யும் தரத்தில் வேலையை நிர்வாகம் எதிர்பார்க்கும். அதுமட்டுமின்றி அலுவலகத்தில் அனுபவமுள்ள ஒருவர் அவருடைய வேலையைச் செய்தாலே போதுமானது. எனவே, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர் தன்னை நிரூபிக்க இருமடங்கு போராட வேண்டும். உங்களது 200 சதவிகித உழைப்பும் அனுபவமுள்ள ஒருவரின் 100% உழைப்பும் ஒன்று என்பதால் இருமடங்கு வேகத்துக்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

3. சக ஊழியர்களைப் புரிந்துகொள்ளுங்கள்!

உங்களோடு வேலை செய்யும் சக ஊழியர்கள் அதிக அனுபவமுள்ளவராக இருப்பார்கள். சிலர் உடனே பேசி சகஜமான சூழலில் உங்களுக்கு நண்பராகி, எல்லாவற்றையும் பொறுமையாக சொல்லித் தருவார்கள். சிலர் தங்களுடைய அனுபவத்தைக் காட்டி சற்று விலகி இருப்பார்கள். இதுமாதிரியானவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளும் வரை நிதானமாகவும், கவனமாகவும் அவர்களை அணுகவேண்டும். அப்படி செய்யும்போது அவர்களும்கூட உங்களைப் பற்றி நல்ல விதமாகப் புரிந்துகொள்வார்கள். சக பணியாளர்களோடு நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதும் உங்கள் அப்ரைசலுக்கு உதவும்.

 

4. புதுமைகள் உங்களுடையதாக இருக்கட்டும்!

அலுவலகம் எப்போதும் புதுமைகளை விரும்பும். ஏற்கெனவே அனுபவமுள்ள ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள எடுக்கும் நேரத்தில், அந்தத் தொழில்நுட்பத்தில் உங்களை நிரூபித்துவிட வேண்டியது அவசியம். இல்லையெனில் அவர்களது அனுபவத்தால் உங்களைவிட வேகமாக அந்தத் தொழில்நுட்பத்தில் இயங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நீங்கள் வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடத்தில் அறிமுகமாகும் புதுமைகளில் உங்களது பங்கு அதிகமாகவும், சில புதுமைகள் உங்களுடையதாகவும் இருக்கட்டும்.

 

5. தனித்துவத்தைக் காட்ட தவறாதீர்கள்!

அனைவருக்குமே தனித்துவமான ஒரு விஷயம் நிச்சயமாக இருக்கும். ஏதாவது ஒரு வேலையை மற்ற எல்லோரையும்விட உங்களால் நன்றாகச் செய்ய முடியும். அந்த வேலையை குறுகிய காலத்தில் கண்டறிந்து, அதில் உங்கள் தனித்துவத்தைக் காட்ட தயங்காதீர்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையில் நீங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களை உங்கள் நிறுவனத்தின் பொருளையோ அல்லது சேவையையோ வாங்க வைக்கும் திறமை இருக்கும். ஒரே நாளில் 50 முதல் 60 ஆர்டர்களைச் சாதாரணமாகச் செய்ய முடியும்; அல்லது ஒரு நிகழ்ச்சியை எப்படி திட்டமிட்டு நடத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் மூலம் நிறுவனத்தின் உயரதிகாரிகளின் மனதில் சட்டென இடம் பிடிக்க உதவும். இதுபோன்று உங்களைத் தனித்துக் காட்டும் திறமையை, முதல் வருடத்தில் பதிவு செய்யுங்கள்.

 

6. இக்கட்டான சூழலை சமாளியுங்கள்!

இக்கட்டான சூழலை சமாளிக்கத் தெரிந்தவரைத்தான் எல்லா நிர்வாகங்களும் விரும்பும். சில நேரங்களில் இக்கட்டான வேலைகளை நீங்கள் தனித்து நின்று செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுமாதிரியான சூழல் ஏற்படும்போது, முதலில் ஒருவருக்குத் தேவை தைரியம். எக்காரணத்தைக் கொண்டும் அந்த வேலையை செய்ய பயந்து, பின்வாங்கக் கூடாது. அதற்குப் பதிலாக அந்த வேலையை சரியாகச் செய்து முடிக்கத் தேவையான ஆலோசனைகளை சீனியர்களிடமிருந்து பெறலாம். இந்த இக்கட்டான சூழலை சவாலாக ஏற்றுக்கொண்டு ஒருமுறை செய்துவிட்டால் போதும்; உங்கள்மீது அலுவலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்துவிடும். முதல் 350 நாட்களில் இதுமாதிரியான இக்கட்டான சூழலை இரண்டு, மூன்று தடவையாவது வெற்றிகரமாக சமாளித்திருந்தால், நீங்கள் பணி நிரந்தரம் ஆவது உறுதி.

 

7. நிதி சார்ந்து திட்டமிடுங்கள்!

வேலைக்குச் சேர்ந்த முதல் 350 நாட்கள் பயிற்சிக் காலம் என்பதால் உங்களது சம்பளம் குறைவாக இருப்பினும், உங்களது அன்றாடத் தேவைகள் போக ஓரளவுக்குப் பணம் உங்களிடம் இருக்கும். இதில் அவசியமற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காமல், முடிந்த அளவு சிறிய தொகையை வங்கி டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சேமிப்பது நல்லது. குறைந்த சம்பளத்தில் உங்களால் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் எனில், சம்பளம் உயரும்போது இன்னும் அதிகம் சேர்க்க முடியும்.

 

8. வொர்க்ஹாலிக்காக மாறுங்கள்!

வொர்க்ஹாலிக்காக இருந்தால் குடும்பத்துடனான நேரத்தை செலவழிப்பது குறையும். ஆனால், இந்த வயதில் பெரிய அளவில் குடும்பப் பொறுப்புகள் இருக்காது என்பதால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

எனவே, வேலைக்குச் சேர்ந்தது முதல் 350 நாட்களில் தூங்கிய நேரம் போக மீதமுள்ள நேரத்தை அலுவலகத்தில் இருந்து, எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டால், பணி நிரந்தரமான பின் அந்த அனுபவம் கட்டாயம் பயன்படும்.

 

9. முடியாது என்ற வார்த்தையைத் தவிருங்கள்!

பயிற்சிக் காலத்தில் உங்களிடம் நிறுவனம் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் இதுவாகத்தான் இருக்கும். என்ன வேலை தந்தாலும் முடியாது என்று சொல்லாமல் வாங்கி அதை செய்து தந்துவிட்டாலே போதும்; உங்கள் மீது நல்ல அபிப்ராயம் வந்துவிடும். இதனால் ஒருவரது அனுபவம் அதிகரிக்கவும் செய்யும். எனவே, முடியாது என்று சொல்லவே சொல்லாதீர்கள். 

 

10. தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்!

பணி நிரந்தரம் ஆனபின் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கத் தேவையில்லை. டார்கெட்டுகளைச் சமாளிப்பது, குழுக்களை அணுகுவது, வாடிக்கையாளருடனான உறவு, அலுவலக முடிவுகளில் பங்களிப்பு என தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படும் சமயத்தில் இந்தத் திறமையும் கைகொடுக்கும்.

 

Thanks to ச.ஸ்ரீராம் & Vikatan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s