Senthil Murugan's Blog

Home » Computers and Internet » வேலைவாய்ப்பு கொடுக்கும் கம்ப்யூட்டர் துறை

வேலைவாய்ப்பு கொடுக்கும் கம்ப்யூட்டர் துறை

Advertisements

 

‘கம்ப்யூட்டர் துறை’யை… அதிக வருமானத்தை தரக்கூடிய துறை என்றே சொல்ல வேண்டும். இதன் மூலம், இன்றைக்கு எத்தனையோ குடும்பங்களின் நிலை, பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது.

சாதாரண மளிகைக் கடைகள் தொடங்கி, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் ராஜ்ஜியம்தான். இதில், என்னென்ன வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன… எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது போன்ற தகவல்கள்…

தொகுப்பு: சா.வடிவரசு – நன்றிஅவள் விகடன்

போட்டோஷாப்!

பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. கேமரா, செல்போன் என்று எதைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாலும்… அவற்றை டெவலப் செய்து பிரின்ட் போடுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்டூடியோ அல்லது லேப் போன்றவற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இங்கெல்லாம் பணிபுரிபவர்களுக்கு… அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன் ‘போட்டோஷாப்’ எனும் மென்பொருளை (சாஃப்ட்வேர்) கையாளும் திறன் பெற்றிருந்தாலே போதும் என்பதுதான் பணித்தகுதி. போட்டோஷாப் தெரிந்திருந்தால்… லேப்கள்தான் என்றில்லை, இன்னும் பல இடங்களிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. உங்களின் திறமையைப் பொறுத்து மாதத்துக்கு பல ஆயிரங்களை இத்துறையில் சம்பாதிக்க முடியும்!

பலன் கொடுக்கும் பிரவுஸிங்!

சொந்தமாக பிரவுஸிங் சென்டர் தொடங்குவது, கைகொடுக்கும் நல்ல தொழில். நான்கைந்து கம்ப்யூட்டர்கள் இருந்தாலே போதும்… இதை ஆரம்பித்துவிடலாம். கூடவே, பள்ளிக் குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களைத் தேடி எடுத்து, பிரின்ட் எடுத்துக் கொடுக்கும் வேலையையும் செய்யலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு, இதற்கான தேவை கிராமங்களில்கூட தற்போது அதிகமாகிவிட்டது. கூடவே ஒரு ஜெராக்ஸ் மெஷினையும் வைத்துவிட்டால்… மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சுலபமாக லாபம் பார்க்க முடியும்.

டேட்டா என்ட்ரி வேலை ரெடி!

நிமிடத்துக்கு 30 வார்த்தைகளுக்கு மேல் டைப் செய்யத் தெரிந்திருந்தால் போதும்… பதிப்பகங்கள், டி.டி.பி மையங்கள், கல்வி நிறுவனங்கள், டேட்டா என்ட்ரி மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு டைப்பிங்கோடு சேர்த்து அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் தெரிந்திருத்தல் அவசியம். மாதம் 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்!

அலுவலகத்திலும் அசத்தலாம்!

அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பற்றி தெரிந்திருந்தாலே போதும்… மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால், ஜவுளிக் கடை… என பல இடங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டர் இயக்கத் தெரிதல், மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ள வேர்டு, எக்ஸல், பவர் பாயின்ட்.. போன்றவற்றை கையாளத் தெரிதல் போன்ற திறமைகள் இருந்தால்… சுலபமாக வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். மாதத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

கம்ப்யூட்டர் சுயதொழில்!

அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு, பிரின்ட் எடுப்பது, ஸ்கேன் செய்வது போன்றவை தெரிந்திருந்தால் போதும்… சுலபமாக சுயதொழில் தொடங்கிவிடலாம். ஒன்று அல்லது இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்ட்டர், ஒரு ஸ்கேனர் என இவற்றைக் கொண்டு… வீட்டிலோ அல்லது வாடகைக்கு அறை எடுத்தோ சொந்தமாக டி.டி.பி மையத்தைத் தொடங்கிவிடலாம். தெருவுக்கு தெரு இருக்கும் பொது தொலைபேசி மையங்களுக்கு அடுத்தபடியாக, பரவலாக இருப்பது… டி.டி.பி மையங்கள்தான். இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என பலருக்கும் இது கைகொடுக்கும். வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டிலேயே தொடங்கிவிட முடியும். மாதம் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை லாபம் ஈட்டமுடியும்.

பி.பி.ஓ!

எத்தனையோ பேர் பல்வேறு காரணங்களால் தங்களின் படிப்பைத் தொடரமுடியாமல் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சரியான வாய்ப்பு… பி.பி.ஓ மையங்கள். இதில் சேர்வதற்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கிலம் உள்ளிட்ட ஏதாவது இரு மொழிகளில் சரளமாக பேசும் திறமையும் இருந்தாலே போதும். ஆரம்பத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இருந்த பி.பி.ஓ மையங்கள், இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் இந்த மையங்களில் சுலபமாக சம்பாதிக்க முடியும்.

பயிற்சி ஆசிரியர்!

கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவரா… கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவரா… உங்களுக்கு காத்திருக்கின்றன வேலைகள். உதாரணமாக, மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ் பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள், அதைக் கற்றுக்கொடுக்கும் மையங்களில் ஆசிரியராகச் சேரலாம். சி, சி++ உள்ளிட்ட கம்ப்யூட்டர் மொழிகளில் திறமை வாய்ந்தவர்கள், அதற்கான பயிற்சி ஆசிரியராக சேரலாம். இவற்றுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் நிறையவே இருக்கின்றன. உங்களுடைய திறமையைப் பொறுத்து வேலையும் சம்பளமும் கிடைக்கும்!

ஐ.டி ஊழியர்!

கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவர்கள்… கம்ப்யூட்டர் அறிவுடன் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மொழி தெரிந்திருந்தால், ஐ.டி நிறுவனங்களில் ‘சாஃப்ட்வேர் புரோகிராமர்’ என்கிற வேலையை எளிதில் கைப்பற்ற முடியும். இதுமட்டுமில்லாமல் டெஸ்ட்டிங், வெப்-டிசைனிங் என பல்வேறு வேலை வாய்ப்புகளும் ஐ.டி நிறுவனங்களில் இருக்கின்றன. இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வாக வேண்டும். இன்றைக்கு ஐ.டி. நிறுவனங்களில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

அனிமேஷன்!

தற்போது… கார்ட்டூன் படங்கள், குழந்தைகளுக்கான பாடங்கள், விளம்பர படங்கள், திரைப்பட காட்சிகள் என்று எல்லாமே அனிமேஷன் மயமாகத்தான் இருக்கின்றன. இதனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வீடியோ எடிட்டிங் நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் அனிமேஷன் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. பட்டப் படிப்போ, முதுகலை படிப்போ படித்திருக்க வேண்டும் என்பது மாதிரியான நிபந்தனைகள் எதுவும் இந்த வேலைக்கு இல்லை. அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், அனிமேஷன் தெரிந்திருந்தாலே போதும். அனிமேஷன் கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே செயல்பட்டுவருகின்றன. 6 மாதமோ, ஒரு வருடமோதான் பயிற்சி. ஆனால், இதில் உங்களுடைய ஈடுபாட்டையும் புகுத்தினால்… இந்தத் துறையில் எளிதாகக் கலக்கலாம். சொந்தமாக அனிமேஷன் ஸ்டூடியோ தொடங்கியும் பணம் ஈட்ட முடியும்!

கம்ப்யூட்டர் சென்டர்!

கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாமலேயே… கம்ப்யூட்டர் துறையில் பணம் சம்பாதிக்க வழியுண்டு. எப்படி என்கிறீர்களா? வெரிசிம்பிள், சொந்தமாக கம்ப்யூட்டர் மையம் தொடங்குங்கள்! கம்ப்யூட்டர் பற்றி நன்றாக தெரிந்தவர்களை பணியில் அமர்த்தி, அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று பலருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி தரலாம். டி.டி.பி, ஜாப் டைப்பிங், பிரின்ட் போன்றவற்றையும் செய்து தரலாம். உங்களுக்கே கம்ப்யூட்டர் அறிவு இருக்கும்பட்சத்தில், கூடுதல் லாபம்தான்! ஓரிரு லட்சங்கள் முதலீடு செய்து… வீட்டிலோ அல்லது வாடகை இடத்திலோ மையத்தை ஆரம்பித்துவிடலாம். மாதம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி, பல லட்சங்கள் வரை சம்பாதிக்கமுடியும். ‘பயிற்சி வகுப்பு’கள் நடத்துவதென்றால், உரிய அரசுத்துறையிடம் அனுமதிபெற மறக்காதீர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: