மயக்கம் என்ன? – பேயாட்சி தமிழகத்தில்

Thanks to விகடன் தலையங்கம் – Dated : 25th July 2012

துக் கடைகளுக்கு எதிரான பா.ம.க-வின் போர் முழக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுமே கவனிக்கத்தக்கது. பா.ம.க-வின் அரசியல் அணுகுமுறைபற்றி விமர்சனங்கள் இருந்தாலும், மது எதிர்ப்பில் அந்தக் கட்சி பொது அரங்கில் காட்டும் உறுதி வரவேற்க வேண்டிய ஒன்று!

மதுவை எதிர்த்ததிலும் மது விலக்கை அமல்படுத்தியதிலும் முன்னோடியாக இருந்த மாநிலம் நம் தமிழகம். சட்டரீதியாக மட்டுமின்றி, சமூகரீதியாகவும் மதுவின் கொடிய குணங்களைத் தொடர்ந்து போதித்துவந்த மண் இது.

ஆனால், கட்டுப்பாட்டுச் சங்கிலி மெள்ள மெள்ளத் தகர்க்கப்பட்டு, போதை அரக்கன் முற்றிலுமாகக் கட்டவிழ்ந்துபோய் இன்று தன் கோர முகத்தைக் காட்டி, வீட்டுக்கு வீடு காவு கேட்டுக்கொண்டு இருக்கிறான். ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே அசிங்கத்தின் அடையாளமாக ஒதுங்கிப் பதுங்கி இருந்த சாராயக் கடைகள், இன்று அரசாங்க முத்திரையோடு குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே கோப்பைகள் குலுங்கச் சவால்விட்டுச் சிரிக்கின்றன.

வளரும் தலைமுறையின் உடல்நலமும் மனநலமும் மெள்ள மெள்ள சிதைவதைத் தடுக்க முடியாமல் பெற்றோரும் மற்றோரும் மௌன சாட்சிகளாக இந்தத் தள்ளாட்டத்தைப் பார்த்துத் துடிப்பதை அரசாங்கம் துளியும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இதே பா.ம.க-வின் நெருக்குதலுக்கு இணங்கித்தான் மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைச் சற்றே குறைத்தது முந்தைய தி.மு.க. அரசு. இப்போதோ, ‘உயர்தர மதுக் கடைகள்’ என்றும் ‘இருபத்து நான்கு மணி நேர மதுச் சாலைகள்’ என்றும் வகை வகையான விதிவிலக்குடன் கொடுமைக்குக் கடை விரிக்கப்படுகிறது.

‘அரசின் வருவாய்க்கு வேறு என்ன வழி?’ என்பதே திரும்பத் திரும்பக் கூறப்படும் நொண்டிச் சாக்கு. வருவாய் வேண்டும் என்றால், வழிப்பறிகூட நடத்தலாம் என்று நியாயப்படுத்தும் செயல் அல்லவா இது! உழைப்பாளி கணவனின் உடலை உருக்கிப் பறித்த பணத்தில்தான், அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அரிசி, மிக்ஸி, மின்விசிறி தர வேண்டும் என்றால், இதை ‘அம்மா’வின் ஆட்சி என்று யார் சொல்வார்கள்?