சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்!–Thanks to Doctor Vikatan

”2020-ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ…. உலக அளவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் எட்டு கோடியைத் தொட்டுவிடும்!” என்று எச்சரிக்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் சமீபத்திய ஆய்வு. 

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத சங்கடம், இன்சுலின் ஊசி. இப்போது அந்தச் சங்கடத்துக்கு ஒரு மாற்று வந்திருக்கிறது. ‘வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஊசி குத்திக்கொண்டு, வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு இல்லை!’ என்கிற நல்ல செய்தியைத் தர வந்திருக்கிறது ‘இன்சுலின் பம்ப்’!

சர்க்கரை நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியம் பேசும்போது… ”இன்சுலின் சுரக்கும் இடம் கணையம். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை இன்சுலினே ரத்தத்தின் மூலமாக செல்களுக்கு அனுப்புகிறது. கணையத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது இன்சுலின் சுரப்பதிலும் குறைபாடுகள் உருவாகும். இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு, ஊசி மூலம் இன்சுலினைச் செலுத்துவது நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை. ஆனால், அடிக்கடி ஊசி மூலமாக இன்சுலினைச் செலுத்தும்போது வலியும் வேதனையும் இருக்கும். இதனால், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நோயாளிகள்கூட சமயங்களில்  போட்டுக்கொள்வது இல்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக ‘இன்சுலின் பென்’ (Insulin Pen) வந்தது. ஆனால், அதன் பயன்பாடும் பலருக்குத் திருப்தியாக இல்லை.

இவர்களுக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்சுலின் பம்ப். இன்சுலின் பம்ப்பை வயிற்றுப் பகுதியில் செருகிக்கொள்வதால் ஒரு நாளைக்கு மூன்று – நான்கு தடவை ஊசி மூலம் இன்சுலின் செலுத்திக்கொள்ளும் வேதனை குறைகிறது. ஆரம்பத்தில் ‘ஓப்பன் லூப் இன்சுலின் பம்ப்’  (Open loop insulin pump) அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு எவ்வளவு இன்சுலின் தேவை என்பதைப் பரிசோதித்து, அதற்கேற்ப நாம் பட்டனை அழுத்தி  இன்சுலினைச் செலுத்த வேண்டி இருந்தது. பம்ப்பில் இன்சுலின் அளவு காலியானாலும் நமக்குத் தெரியாது. இந்தக் குறைபாடு இல்லாத வகையில் வந்திருப்பது ‘க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப்’ (Closed loop insulin pump). இதில் உள்ள பயோ-சென்சார் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதித்து, உடலுக்குத் தேவையான இன்சுலினைத் தானாகவே செலுத்தும். இதைச் ‘செயற்கைக் கணையம்’ என்றே கூறலாம். ஒரு செல்போன் அளவே உள்ள இந்த இன்சுலின் பம்ப்பை நோயாளியின் இடுப்புப் பகுதியில் வைத்து அதில் உள்ள மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மற்றும் பிளாஸ்டிக் ஊசியை வயிற்றுக்குள் செருகிக்கொள்ளலாம். இதனால் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் இதில் இருக்கும் வசதி.

பல்வேறு சிகிச்சை முறைகளோடு ஒப்பிடுகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவின் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதில் க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் முழுமையான மருத்துவப் பயன் தருவதாக உள்ளது. மேலும் உடல் அளவிலும்  மனதளவிலும் சோர்ந்துபோக வேண்டிய நிலையும் இல்லை. எத்தனை யூனிட் இன்சுலின் தேவையோ, அதைத் துல்லியமாகக் கொடுக்கவும் முடிகிறது.

ஆரம்பத்தில் ஒரு இன்சுலின் பம்ப்பின் விலை மூன்று லட்சம் ரூபாயாக இருந்ததால், இது அதிக செலவுள்ள சிகிச்சை முறையாகக் கருதப்பட்டது. இன்னொரு விஷயம், இந்தச் ‘சின்ன யானை’க்குத் தீனியும் போட வேண்டும். இன்சுலின் பம்ப் உபயோகிப்போர் இன்சுலினுக்காக மாதத்துக்கு ரூ. 3,000-ல் இருந்து ரூ. 5,000 ரூபாய் வரை செலவிடவேண்டும். ஆனால், இப்போது க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் ரூ. 80,000 முதல் ரூ. 2 லட்சம் வரைக்கும் கிடைக்கிறது” என்றார் டாக்டர் பாலசுப்பிரமணியம்.

நல்ல செய்திதான். ஆனால், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் விலை இன்னும் குறைந்தால்தான் இந்தச் செய்தி இனிக்கும்!

அரசுக்கு  வேண்டுகோள்!

இன்சுலின் பம்ப் குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் கருணாநிதி. ”டைப்-1 சர்க்கரை நோய் சிறுவயதிலேயே குழந்தைகளைத் தாக்கக்கூடியது. இவர்களுக்குத் தினமும் நான்கு முறையாவது இன்சுலின் ஊசி போடவில்லை எனில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளேயே கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால்  வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். இது உடல் வலி மட்டுமின்றி, மன வலியையும் அதிகரித்து, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. தமிழ்நாட்டில் குறைந்தது 200 குழந்தைகளாவது டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை அரசு தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றவர், ”அரசின் காப்பீடு திட்டத்தில் இன்சுலின் பம்ப் பொருத்துவதையும் சேர்க்க வேண்டும். இப்போது இன்சுலின் பம்ப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழக அரசே இறக்குமதி செய்வதன்மூலம் வரிகள் குறையும். மேலும், மொத்தமாக வாங்கும்போது அதன் விலை பாதியாகக் குறைந்துவிடும். அரசின் சார்பிலேயே இன்சுலின் பம்ப் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு, இதயம், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றைக் குறைக்க முடியும்” என்கிற வேண்டுகோளை முன்வைத்தார்.

A.Leninsha – Thanks to Doctor Vikatan – 1st April 2012

குடி கெடுக்கும் குடி வருமானம் – ஆர்.எஸ். நாராயணன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடிய கண்ணதாசனின் கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கைத் தோற்றுவித்துவிட்டது. மதுவைக் குடித்துக் குடித்து ஈரலை இழந்து இறப்பவர் ஒருபக்கம்.

மாநிலந்தோறும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் பருகி நினைவே திரும்பாமல் இறப்பவர் பாதி, அதனால்தான் ""மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் என்று இறைவன்மீதும் அவதூறு செய்கிறான் கவிஞன். போகட்டும் குடிகெடுக்கும் குடிவருமானம் என்ற இன்றைய விவாதத்தில் இதனால் சமூகத்துக்கு நன்மை உண்டா? என்ற கேள்வியுடன் தொடர்வோம்.

நோக்கம் என்னவோ குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான். மதுவிற்பனையில் முறைகேடுகள் அதிகமாகிவிட்டது என்பதால் மது புட்டிக்கு கூடுதல் வரி விதித்தும், மதுவிற்பனையில் அரசு ஏகபோகத்தையும் புகுத்தினார்கள். எவ்வளவு விலை உயர்ந்தாலும் குடிபெருகியதே தவிர, குறையவில்லை. நாளடைவில் குடியைக் குறைக்கும் திட்டம் குடியைப் பெருக்கும் திட்டமாக மாறியது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான எக்சைஸ் வரி திரட்டப்படுகிறது. எக்சைஸ்வரி என்பது மதுபானம், ஆல்கஹால், பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு நிகரவிலைக்குமேல் விதிக்கப்படும் வரி. இவற்றில் மதுபாட்டிலின் பங்குமட்டும் 99.5 சதவிகிதம்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாடிபிடித்துப் பார்த்தால் ஜி.டி.பி என்று சொல்லப்படும் மொத்த தேச வருமான மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 8.2 சதவிகிதம். மக்கள்தொகையின் பங்கு 6.06 சதவிகிதம்.

அதேசமயம் இந்தியாவின் மொத்த எக்சைஸ் வரி வருமானத்தில் தமிழ்நாட்டின் பங்கு 13.58 சதவிகிதம். அதாவது குடியே வாழ்வு, குடியே சாவு. அதுவே தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் சிறப்பு எதுவெனில், எக்சைஸ் வரிக்கு மேல் மதுவுக்கு விற்பனை வரி இரண்டு நிலைகளில் வசூலாகிறது. முதல்நிலை விற்பனை மூலம் ஆண்டுக்கு 6125.48 கோடி ரூபாய் வசூல், இரண்டாம் நிலை விற்பனை மூலம் 12415.09 கோடி ரூபாய் வசூல். இந்தத் தொகையுடன் எக்சைஸ் வரி 7508.19 கோடியையும் சேர்த்தால் மதுபான வரி வருமானம் 26048.75 கோடியாகும். தமிழ்நாட்டுக்கு மொத்தவரிகள், மத்திய அரசுப்பங்கு எல்லாம் சேர்த்து 46,063 கோடியில் மதுபான உற்பத்தி நுகர்வால் மட்டும் 56 சதவிகித வருமானம் உள்ளது. இதன் பொருள் மக்கள் மட்டுமல்ல "மாநிலமே மதுக்கோப்பையில் குடியேறியுள்ளது.

தமிழ்நாடு மது நாடாக இல்லாமல் பரிபூர்ண மதுவிலக்கு நிலவிய முன்னொரு காலத்தில் ராஜாஜி, காமராஜர் போன்றோர் முதலமைச்சர்களாக இருந்தபோது எவ்வளவோ நல்ல நல்ல உதாரணங்கள் இருந்தன. அவை இதர மாநிலங்களுக்கும் பரவின. இந்தியாவிலேயே முதல்முறையாக 1953-ல் குத்தகையாளர் – குடிவார உரிமைச் சட்டத்தை இயற்றிய பெருமை ராஜாஜியைச் சாரும்.

பிற்காலத்தில் சுதந்திராக் கட்சியைத் தோற்றுவித்த அதே ராஜாஜிதான் சோஷலிசத்தின் திறவு கோலாக மதிக்க வேண்டிய குத்தகை உரிமைச்சட்டத்தை இயற்றித் தமிழ்நாட்டின் நிலப்பிரபுக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டைப் பின்பற்றி வடமாநிலங்களிலும் நிலஉரிமையில் குத்தகையாளர்

பாதுகாப்புச் சட்டம் பல ஆண்டுகள் கழித்து இயற்றப்பட்டன. பின்னர், பதவியேற்ற காமராஜர் குத்தகையாளர் பங்கை 40 சதவிகிதத்திலிருந்து 50 ஆக உயர்த்தியதுடன் ஒவ்வொரு கிராமங்களிலும் ஆரம்பக்கல்விக்கான பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தார். மதியஉணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். மதியஉணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். எம்.ஜி.ஆருக்குப் பின்னரே இதர மாநிலங்களில் மாணவர்களுக்கு மதியஉணவுத் திட்டம் பரவியது.

இப்படிப்பட்ட நல்ல உதாரணங்களுக்கு வித்திட்ட அதே தமிழ்நாடுதான் பல கெட்ட உதாரணங்களுக்கும் வித்திட்டது. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி விஞ்ஞான ரீதியாக ஊழல்களை உருவாக்கிய தி.மு.க. மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியது. அரசாங்கத்தின் ஒவ்வொரு பதவிகளுக்கும் விலை வைத்தது. வைக்கப்பட்ட விலையை ஒன்றியத்தலைவரும், அமைச்சரும் பங்கு பிரித்துக்கொண்டனர். கஜானாவைக் கொள்ளையடிக்க மேல்மட்ட அதிகாரிகள் – அமைச்சர்கள் கூட்டணி உருவாகி ஊழல்களில் புதிய எல்லைகளைத் தொட்டனர். இப்படிப்பட்ட கூட்டணி பின்னர் இதர மாநிலங்களுக்கும் பரவியது. மாநிலத்தில் மட்டுமல்லாது அன்று மத்திய அரசிலும் அமைச்சராயிருந்த தமிழர் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள தொகை ஒன்றுக்குப்பின் பதின்மூன்று பூஜ்யங்கள் கோடி. இப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணங்களால் கவர்ச்சியுற்ற இதர மாநிலங்களிலும் கூட்டணி ஊழல்கள் இப்போது உச்சகட்டத்தில் உள்ளன. இன்று தமிழ்நாட்டைப் பின்பற்றி மதுவிற்பனையை மாநில ஏகபோகமாகப் பல மாநிலங்கள் அரசுடைமையாக்கி அரசு வருமானத்தை எக்சைஸ் வரிக்கு மேல் மதுப்புட்டி விற்பனை வரி மூலம் பெற்ற பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முன்வந்துவிட்டன.

குஜராத் மட்டுமே இதில் விதிவிலக்கு. பல்வேறு மாநிலச் செலவினங்களை குஜராத் எப்படிச் சமாளிக்கிறது? நிலப்பரப்பு அடிப்படையில் குஜராத்தும் தமிழ்நாடும் ஏறத்தாழ ஒரே அளவுதான். எனினும், பாலைவனம், மலை, குகை, வனம் என்று நிலப்பரப்பு அதிகம் உள்ளதால் வாழ்விடங்கள் தமிழ்நாட்டைவிடக் குறைவு. மக்கள்தொகையும் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டால் குறைவாயிருக்கலாம். ஆகவே வரவு – செலவுத் திட்டமும் கால்பங்கு குறைவுதான். மதுபானத்துக்கு குஜராத்தில் எக்சைஸ் வரி வசூல் 3,237.36 கோடி. தமிழ்நாட்டு வசூலில் 40% மதுவிற்பனையை அரசு ஏற்று நடத்தாததால் விற்பனைவரி பூஜ்யம். ஒட்டுமொத்த மதுகுடி வருமானம் தமிழ்நாட்டில் 26048.75 கோடியுடன் ஒப்பிட்டால் 15% கூடத்தேறாது. எனினும், வரிசாரா மாநில வருமானம் தமிழ்நாட்டில் 16,167.01 கோடி என்றால் அதுவே குஜராத்தில் 16418.01 கோடி ரூபாய் மற்றும் குஜராத்தில் சமூகநலத் திட்டத்துக்கான செலவினம் மாநில ஜி.டி.பி.யில் 5.83 சதவிகிதம். அதுவே தமிழ்நாட்டில் 2.67 சதவிகிதம்.

தமிழ்நாட்டைவிடச் சிறிய மாநிலமான குஜராத்தில் குடிகெடுக்கும் குடிவருமானத்தைக் கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் குடி வருமானமே பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும், மதுவை மையமாக வைக்காமல் வேறுவழியில் மாநில வருமானத்தை உயர்த்தத் திட்டமிடலாம். மது எவ்வாறு உடல் நலத்தைக் கெடுக்கிறதோ, அதுபோலவே பாக்கெட்டுகளில் கிட்டும் பல்வேறு ஃபாஸ்ட்புட்களும் உடல்நலத்தைக் கெடுப்பதால் அதிகவரி விதிக்கலாம்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பும் பெண்கள் வேலைக்குச் சென்றார்கள். காலையில் எழுந்து சுமார் 1 மணி நேரமாவது சமையல் அறையில் வேலை செய்வதுண்டு. சில்வர் பாக்சில் உப்புமா, புளிசாதம், தயிர்சாதம், இட்லி, ஊத்தப்பம் என்று எதுவும் எடுத்து வருவதுண்டு. இப்போதெல்லாம் அப்படி இல்லை, என்னென்னவோ புதிய புதிய பெயர்களில் பீட்சாவாம், பாஸ்தாவாம், பல்வேறு நூடுல்கள், வாகர், பாகர் என்று பல கீரீம் போட்ட பன் அயிட்டம் பற்பல. இவற்றில் ஏராளமாக ரசாயனங்களும் உள்ளன. ஹாட்டாக், கோல்ட்பிக் என்று நான்வெஜ் அயிட்டங்களும் உண்டு.

கோதுமை மாவு சற்று பழுப்பாயிருக்கும். அதை பிளீச் செய்து மைதா மாவு வெள்ளையாக்கப்படுகிறது. இந்த பிளீச் செய்யப்பட்ட மைதா மாவுதான் பல்வேறு பாக்கெட் புட்டுக்கு அடிப்படை. வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் வீட்டில் சமைப்பதுவே அபூர்வம். சுகாதாரமான உணவு என்று சொல்லப்படும் சுகாதாரமற்ற உணவை அன்றாடம் உள்ளே தள்ளுகின்றனர். மேகி என்பது ரசாயனமிட்ட மக்காச்சோள அவல்.

இதைவிட நெல்லில் இடித்த சிவப்பு அவலும் கடையில் மலிவாக இருக்கும். அவலை ஐந்து நிமிஷம் வெந்நீரில் ஊறவைத்தால் நல்ல ஃபாஸ்ட்ஃபுட் ரெடி. சிறிது எலுமிச்சம் பழம் பிழிந்து அல்லது தயிர் கலந்து உள்ளே தள்ளலாமே! உளுந்தங்களி, கேப்பைக்களி, கம்புக்களி என்று பல நல்லுணவுகள் உள்ளனவே.

பன்னாட்டு நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகளான பெப்சி, கோகோ கோலா, பிரிட்டானியா பிஸ்கட், பூஸ்ட், சாக்லேட்டுகள், காம்பிளான், ஹார்லிக்ஸ் ஆகிய அயிட்டங்களுக்கும் கூடுதல் வரி விதிக்கலாம். மெல்ல, மெல்ல மது விற்பனையை அரசு கைவிடுதல் நன்று.

இன்று நாமெல்லாம் மறந்துவிட்ட தேசியக்கவிஞர் தேசிக வினாயகம் பிள்ளை உமர் கையாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தபோது "மது’வை "அமுதாக’ மாற்றியுள்ளதை நினைவுகொள்ளலாம். உமர் கையாமின் புகழ் பெற்ற கவிதையைப் பிள்ளை அவர்கள்:

""வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வீசுந்தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவிஉண்டு

கலசம் நிறைய அமுதுண்டு”

என்று எழுதி, மதுவிலக்கை ஆதரித்ததை நினைவில்கொண்டு, குடி கெடுக்கும் குடி வருமானம் தமிழனுக்கு வேண்டாம் என்று அரசு முடிவு எடுப்பது நன்றாயிருக்கும். டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலம் தமிழன் பெருமை கொள்வான்.

— Thanks to Dinamani – dated 8th March 2012