பிட்சை எடுத்ததாம் பெருமாள் அதை பிடுங்கியதாம் அனுமார் – இந்தியாவுக்கு யு.எஸ். கடன் பாக்கி

புது தில்லி, ஆக. 7: இந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொகை கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் நமக்குப் பின்னால்தான் உள்ளன. அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்கா, இப்போது கடன்பட்டு கலங்கி வருகிறது. பெரும் போராட்டத்துக்குப் பின் அந்நாட்டின் கடன் பெரும் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில்துறையில் மந்தம் நிலவுகிறது. அது அடுத்த பொருளாதார நெருக்கடிக்கு அறிகுறி என்றும் கணிக்கப்படுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டுக்கு உள்ள கடன்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் கடன் 15 லட்சம் கோடி டாலரை நெருங்கி வருகிறது. இதில் 4.5 லட்சம் கோடி டாலர் வெளிநாடுகளில் இருந்து பெற்றது.

சீனா முதலிடம்:÷அமெரிக்காவுக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டிய கடன் 1.15 லட்சம் கோடி டாலர்.

இதற்கு அடுத்தபடியாக முறையே ஐப்பான், பிரிட்டன், பிரேசில், தைவான், ஹாங்காங், ரஷியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, லக்ஸம்பர்க், ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன.

இப்பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் அமெரிக்கா பெற்றுள்ள கடன் 4,100 கோடி டாலர் (ரூ.1.83 லட்சம் கோடி).

ஆஸ்திரேலியா, மலேசியா, இஸ்ரேல், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து, தென்கொரியா, போலந்து, பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட குறைந்த அளவிலேயே அமெரிக்காவுக்கு கடன் வழங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா அளித்துள்ள கடன், கடந்த ஓராண்டில் மட்டும் 1,000 கோடி டாலர் அதிகரித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்கள், கருவூலப் பத்திரங்களை இந்தியா அதிக அளவு வாங்கியுள்ளதே இதற்குக் காரணம்.

அன்னியச் செலாவணி கையிருப்பு:÷இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ள அன்னியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்காவின் கருவுலப் பத்திரங்கள் அதிகம் உள்ளன. அன்னியச் செலாவணி கையிருப்பில் 10 சதவீதம் அமெரிக்க டாலராக உள்ளது. எனினும் அமெரிக்க கடன் பத்திரங்களை கையிருப்பாக வைத்திருப்பது பாதுகாப்பானதுதான் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பெரும் அரசியல் போராட்டத்துக்குப்பின் அமெரிக்காவின் கடன் பெறும் வரம்பு 14.3 லட்சம் கோடி டாலராக உயர்த்தப்பட்டது. அதேசமயம் அடுத்த 10 ஆண்டுகளில் செலவு வரம்பை 2.4 லட்சம் கோடி டாலர் குறைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Thanks to www.dinamani.com