சவால்களை வரவேற்போம்!

நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும்  உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?

‘ஆம்’ என்று சொன்னால், கங்கிராட்ஸ்… நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!

உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட  சில நேரம்  தடுமாறும் இடம் அது.

சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.

சவால்களை வரவேற்போம்..!

பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.

ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.

"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.

சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.

தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.

மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?

சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.

மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.

இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?

காரணம், அவசரம்.

பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது.  அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?

பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும். பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.

பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.

Thanks to Youthful Vikatan (http://www.vikatan.com/article.php?mid=10&sid=188&aid=6659)