ராஜினாமா ஒரு தீர்வாகுமா?

வெற்றி, வெற்றி என எட்டுத் திக்கும் எக்காளம் கேட்கிறது. வெற்றியைப்பங்கிடுவதில் கடும் போட்டியும் நிலவுகிறது. ஊடகங்கள் ஒரு பக்கம், குற்றம்கண்டுபிடித்தே பெயர் வாங்கும் எதிர்க்கட்சிகள் மறுபக்கம்.ராஜா ராஜினாமா செய்துவிட்டார்!

முடிந்துவிட்டதா எல்லாம்? இந்திய அரசியல்வாதிகளின் மானம்காப்பாற்றப்பட்டுவிட்டதா? இனிமேல் மத்திய அரசு, அப்பழுக்கற்ற அரசாகத்திகழுமா? கழகத்தின் மீது பட்ட கறை நீங்கிவிட்டதா?எதுவுமே இல்லை. இந்த அரசியல்வாதிகளின் மானம் மீண்டும் கப்பலேறும்; மத்தியஅரசு மீது மேலும் பல ஊழல் புகார்கள் எழும்; கழகம் தன் கடமையைச் செய்யும். எதுவுமே நிற்கப்போவதில்லை. அப்புறமும் எதற்கு வெற்றிக் கொண்டாட்டங்கள்?எல்லாம், வெறும் பரபரப்புக்காக மேற்கொள்ளப்படுபவை. மத்தியில் ஒன்றும் ராமராஜ்யம் நடக்கவில்லை; ராஜா மீது குற்றம்சாட்டியவர்களும் உத்தம புத்திரர்கள்இல்லை. எல்லாருமே முதுகில் அழுக்கைச் சுமப்பவர்கள் தான். அடுத்தவர் முதுகுதெரியும்போது ஆர்ப்பாட்டம் போடுவார்கள்; தங்கள் முதுகின் மீது கவனமாகதிரையிடுவார்கள்.
ராஜினாமா மூலம் எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாகச் சரித்திரம் இல்லை.

சிபு சோரன் என ஒரு மத்திய மந்திரி இருந்தார். நினைவிருக்கிறதா? அவர் மீது, ஓட்டு போடுவதற்காகலஞ்சம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. தன் உதவியாளரை கொலை செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டு. நமக்குத் தெரிந்தது இவ்வளவு தான். இன்னும் எவ்வளவுஉண்டோ!அவரும் ஒரு கட்டத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டதா? அவருக்கு லஞ்சம்வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இறந்துபோன உதவியாளர் தான் உயிரோடுதிரும்பினாரா? சோரன் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

நட்வர் சிங் என ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் தான் வெளியுறவு மந்திரி. ஈராக்கிலிருந்து எண்ணெய்கொள்முதல் செய்ததில் அவருக்குத் தொடர்பு என்ற புகாரால் ராஜினாமா செய்தார். என்ன ஆயிற்று? எண்ணெய் ஊழலில் நாடு இழந்த பணம் ஈடு கட்டப்பட்டதா?அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அவர் தான்விசாரிக்கப்பட்டாரா? நட்வர் சிங் ராஜினாமா செய்தார்; அவ்வளவு தான்!

ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பென்னாண்டஸ் மீது சவப்பெட்டி ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. ராஜா விவகாரம் மாதிரி தான்; பார்லிமென்டே நடக்கவில்லை. பெர்னாண்டஸ் எழுந்து நின்றாலே, வெளிநடப்பு செய்துவிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தது காங்கிரஸ். வேறு வழியில்லாமல் அவரும் ராஜினாமா செய்தார்.கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது சி.பி.ஐ., தயாரித்த குற்றப்பத்திரிகையில் பெர்னாண்டஸ் பெயரே இல்லை. அப்போதுகாங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டு என்ன ஆனது? சி.பி.ஐ., பொய்யானகுற்றப்பத்திரிகையைத் தயார் செய்துவிட்டதா? இல்லை, காங்கிரஸ் தான்பெருந்தன்மையாக விட்டுவிட்டதா?

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ராஜினாமா செய்தார். கார்கில் போரில் இறந்தோரின் ஆத்மா சாந்தியடைந்துவிட்டதா? அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு சவான்முதல்வராகிவிட்டார்; அவ்வளவு தான். அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்முடிந்துவிட்டது.

மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் ராஜாவின் பக்கம் பார்வையைத் திருப்பின. எந்தச்சேனலிலும் வேறு செய்தியில்லை; ஒரு நாளும் பார்லிமென்ட் நடக்கவில்லை. விடாமல் குடைச்சல் கொடுத்ததன் எதிரொலியாக, அவரும் ராஜினாமாசெய்துவிட்டார். முடிந்தது ஸ்பெக்ட்ரம் பிரச்னை.அடுத்த விவகாரத்தை நோக்கி கவனத்தைத் திருப்ப வேண்டியது தான். இது தானேநடந்து கொண்டிருக்கிறது இத்தனை நாளாய்? இது தான் நடக்க வேண்டுமா இனியும்?கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, முலாயம் சிங், எடியூரப்பா, லாலு, சோனியாஎன, குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல்வாதியே கிடையாது. அதேசமயம், குற்றம்செய்ததாக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதியும் கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், பாரபட்சமற்ற விசாரணை என்பதற்குஎந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாருடைய செயல்பாட்டுக்கு பின்னணியிலும்ஏதோ ஒரு சதி இருக்கிறது. அப்புறம் எப்படி இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியும்?

ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்; ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்; முறைகேடான சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்ய வேண்டும். இவையெல்லாம் நடந்தால் மட்டுமே ஊழலின் வீச்சு ஒரு சதவீதமாவது குறையும். இதற்கெல்லாம் முதல் படியாக, உருப்படியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல், ஒன்றை ஒன்று மிஞ்சும் ஊழல் கதைகளைக்கேள்விப்பட்டு, வாயைப் பிளந்துகொண்டிருக்க வேண்டியது தான்.ஒரு வரியில் சொல்வதானால்…  விரல் நுனியில் இருக்கும் ஆயுதத்தைவீணாக்கிவிட்டு, விதியை நோவதில் அர்த்தமில்லை.