அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்

Thanks to மா. ஆறுமுககண்ணன் , Dinamani-18th March
ரசாயனப் பொருள்கள்
நிரம்பிய மதுவைவிட, இயற்கை பானமான கள்ளால் மனிதனுக்குக் கேடொன்றும் இல்லை
என்பதால் கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தில்
இப்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், கள் விற்க
அனுமதித்தால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்பதால் கள்ளை
அனுமதிக்க முடியாது என கரிசனத்துடன் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள்.

அது
என்ன ரகசியமோ, கள் மீது ஒட்டாத ஆட்சியாளர்களின் உள்ளம், மது மீது ஒட்டிக்
கொள்கிறது. கள் என்றால் உதடுகள் ஒட்டாது; மது என்றால்தான்
(ஆட்சியாளர்களின் உள்ளம் மட்டுமல்ல,) உதடுகள்கூட ஒட்டுகின்றனபோலும். ஆனால்,
கள்ளோ, மதுவோ… இரண்டுமே குடிப்போரின் மூளையைச் சிறிதுசிறிதாக
மழுங்கடிக்கச் செய்பவை என்னும்போது அவை இரண்டுமே தேவையற்றதுதான்.
விஷத்தில் நல்ல விஷம் என்றும் தீய விஷம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது
தகுமோ?

விபத்தைத் தடுக்கும் நோக்கில், பஸ் ஓட்டுநர்கள் செல்போன்
எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது அரசு. மீறி கொண்டு செல்வோருக்கு
அபராதம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விபத்துகளை
ஏற்படுத்தி, சமகால சமுதாயத்தைச் சீரழித்து, ஒன்றல்ல பல தலைமுறைகளைத்
தள்ளாட வைக்கும் எனத் தெரிந்தும், மதுக்கடைகளை வீதிகள்தோறும் திறந்து
விற்பனையின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும்
ஆட்சியாளர்களுக்கு யார் விதிப்பது அபராதமும், தண்டனையும்?

கடமை,
கண்ணியம், கட்டுப்பாட்டை
வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழியில்
ஆட்சி நடத்துவதாகக் கூறும் தலைவர்களால் தமிழகத்தில் மதுவிற்பனைதான் பெருகி
வருகிறது. இதனால், இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றனர். கண்ணியத்தையும்
மறக்கின்றனர்; வீட்டுக்கும் நாட்டுக்கும் தாங்கள் செய்ய வேண்டிய
கடமையையும் கைகழுவுகின்றனர். கடந்த கால ஆட்சிகளில் தொடங்கப்பட்ட பல
நல்ல திட்டங்கள் இருந்தாலும்,  தொடர்ந்து வரும் அரசுகள் அந்தத் திட்டங்களை
சில வேளைகளில் கண்டுகொள்வதில்லை. ஆனால் மதி விலக்கும் மதுவுக்கு மட்டும்
விதிவிலக்கு. அரசுகள் மாறினாலும், மதுவின் ஆட்சி மாறாதது. இலவசத்
திட்டங்கள் வேண்டும் என அரசுகளிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை
விடுப்பதில்லை.

வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தேர்தலின்போது
இலவசத் திட்டங்கள் குறித்து கவர்ச்சிகர அறிவிப்புகளை கட்சித் தலைவர்கள்
வெளியிடுகின்றனர். வாக்காளர்களும் விளக்கில் விழுந்த விட்டிலாய் அந்த
அறிவிப்புகளில் மயங்கி வாக்களிக்கின்றனர். விளைவு, அந்தக் கட்சிகள்
ஆட்சியில் அமர்ந்ததும், வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இலவசத்
திட்டங்களைச்  செயல்படுத்துகின்றன.  டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம்
கிடைக்கும் வருவாயை இலவசத் திட்டங்களுக்குப்  பயன்படுத்துவதாக அரசுகள்
கூறுகின்றன. ஆனால், இந்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்கள்
குடிமகன்களாக மாற்றப்படுகின்றனர். குடும்பத் தலைவனைக் குடிக்கச் செய்து
குடும்பத்துக்கு இலவசங்கள் வேண்டும் என யார் கேட்டது?

 மகாத்மா
காந்தி, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர்
உள்ளிட்ட அன்றைய தலைவர்கள்
மது தீது எனக்கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்தினர். இன்றைய  ஆட்சியாளர்களோ
மதுபானங்களால் கஜானா நிரம்பி வழிவதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர்.   மதி (அறிவு) என்ற வெள்ளி முளைத்து, மது என்ற சனி தொலைந்தால்தான் நிம்மதி என்ற ஞாயிறு பிறக்கும் என்பது ஆட்சியாளர்கள் அறியாததா?  
குடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவன் ஒருவன் தினமும் சராசரியாக மதுவால்
ரூ. 70-க்கும் மேல் இழக்கிறான் என்றும், ஆண்டுக்கு 300 நாள்களுக்கு அவன்
குடிப்பதாகவும் கணக்கிட்டுப் பார்த்தால் ஓராண்டுக்கு ரூ. 20
ஆயிரத்துக்கும் மேல் அவன் இழக்கிறான்.  ஆக, இத் தொகையை அவன்,
அறியாதவண்ணம் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளும் அரசு, அவன்
குடும்பத்துக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு,
வேட்டி, சேலைகளை வழங்குவதாகக் கூறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தி,
மக்களைக் குடியிலிருந்து தடுத்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்
தங்கள் தேவைகளைத் தாங்களே, உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது
நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மைதானே! 

தமிழகத்தின் மொத்த
மக்கள்தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காகச்  செலவிடும் தொகையுடன்
ஒப்பிட்டால் மது குடிக்கச் செலவிடும் தொகையே அதிகமாக உள்ளதாகப்
புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும்.
இலவசத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படும் நிலையும் மாற வேண்டும். 
மது வாங்கும் சக்தியை மக்களிடம் அதிகரிப்பதை அரசு கைவிட்டு, வாழ்வை
வளப்படுத்தவும், வசப்படுத்தவும் ஏற்றவகையில் பொருள்களை வாங்கும் சக்தியை
அதிகரிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டும்.   உழைத்துச் சம்பாதித்த
தொகை முழுவதையும் குடித்தே அழிக்கும் தன்னால்தான், தன் குடும்பம் ஒரு
ரூபாய் அரிசிக்கும், ஒரு வேட்டி, சேலைக்கும் நீண்ட வரிசையில் காத்துக்
கிடக்கிறது என்பதை ஏழைக் குடிமகன்களும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பொதுநலம்
விரும்பும் அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச்
செய்ய வேண்டும். மது விற்கும் அரசு உள்ளவரை மக்கள் வறுமைப் பிணியிலிருந்து
மீளுதல் என்பது மிகக் கடினமே. குடும்ப மானத்தைக் குடிக்கும் மதுவை இனி
தான் குடிப்பதில்லை என குடிமக்களும், மதுவால் வரும் வருமானம் பாவத்தின்
பலன் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியாளர்களும் தீர்மானமாய்
கொண்டால் இலவசங்கள் தேவைப்படாது.  மதுக்கடைகள் மற்றும்
குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகளைக் கண்டு மனம் வெறுத்து டாஸ்மாக் கடைகளை
இடம் மாற்ற வலியுறுத்தியும், மதுவை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும்
தற்போது பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதாக வரும்
பத்திரிகைச் செய்திகள் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏனோ?  

பகுத்தறிவுச் சிந்தனையில் பழுத்த பழமாகி, மூட நம்பிக்கைகளை முற்றும்
வெறுப்பவர் தமிழக முதல்வர். ஆனால், மதுவால் கிடைக்கும் கோடிக்கணக்கான
ரூபாயை ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளில் தேடலாம் என உறுதி கொண்டு,
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட, நம்பிக்கை கொள்வார் எனில், அவரை பல கோடி ஏழை
இதயங்கள் வாழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

One thought on “அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s