காலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா!

Thanks to பழ. கருப்பையா – Dinamani- 17th March 2010

தொலைபேசி ஒலிக்கிறது; வெளியே நிற்பவன் வீட்டுக்குள் ஓடி வருகிறான் அதை எடுப்பதற்கு. இது ஒரு காலம்.இப்போது ஒலிக்கிறது; கையளவு தொலைபேசியோடு வீட்டுக்கு வெளியே பாய்கிறான்; இல்லாவிட்டால் சமிக்ஞை கிடைப்பதில்லை.முன்பெல்லாம்
தொலைபேசியை எடுத்தவுடன், "எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்பார்கள்.
இப்போதெல்லாம் "எங்கே இருக்கிறாய்?’ என்று கேட்கிறார்கள்.

ஒரு
பெரிய மனிதரைப் பார்க்கச் செல்லும்போது இரண்டு எலுமிச்சம்பழங்களை
எடுத்துச் செல்வது ஒருகாலத்துப் பழக்கம். அவற்றின் விலை நான்கணா.
இருபத்தைந்து காசு. அவற்றுக்குப்  பயன்பாட்டு மதிப்புண்டு. இன்று
பிளாஸ்டிக்கில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள கண்ணைப் பறிக்கும் பல
வண்ணங்களையுடைய மணக்காத மலர்களைக் கொண்டு செல்கின்றனர். அதைக் கொடுத்தவர்
சென்ற பிறகு, அது குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். அதன் விலை முன்னூறு
ரூபாய்.

முன்பெல்லாம் மாவு அரைக்கும்போது குழவி சுற்றும்; ஆட்டுக்கல் நிலையாக நிற்கும். இப்போது குழவி நிற்கிறது; ஆட்டுக்கல் சுற்றுகிறது.

பழைய
நாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள்.
குளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ஓர்
அன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர் பாடல்களையும்
தேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித் தின்றுவிட்டு
கோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற இறைப்பணிகளைச் செய்து
கொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு
ஆண்டிப் பண்டாரம் என்று பெயர். அவர்களுக்கு மதிப்புண்டு.இன்று
அதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம் பேசுகிறார்கள்;
அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம்
அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்’ என்பதற்கு
மாறாக "அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று வேறு போதிக்கிறார்கள். விபூதிப்
பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை
கோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே
நினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற
கதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.அன்றைக்குச்
சாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை. இன்று
சாமியார்களின்மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின்
படியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன? அரசுகளுக்கு விலையும் உண்டு;
கொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.

காந்தி,
ஆசிரமத்தில் வாழ்ந்தார்; ஆசிரமம் காந்திக்குச் சொந்தமில்லை.
தென்னாப்பிரிக்காவில் தனிச் சொத்துடைமை கொள்வதில்லை என்று காந்தி உறுதி
பூண்டார். இந்திய அரசியலே ஆன்மிகம் ஆனது.இன்று அரசியல்வாதி
யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி
யோக்கியனாக இருப்பான்?
பிரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் நவீன காலச்
சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப் பிள்ளைகள்.வழிநடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத்தானே இருக்கும்.காலையில்
நடப்பதன் மூலமோ ஓடுவதன் மூலமோ வியர்வையை இயற்கையாக வெளியேற்றி உடல்நலம்
பேணலாம். இவன் தலையை மட்டும் வெளியே வைத்துக் கொண்டு, உடலை ஒரு
பீப்பாய்க்குள் வைத்துச் சுற்றிலும் நீராவியைப் பாய்ச்சி வியர்வையைக்
கூடப் பிதுக்கி எடுக்கிறானே!

தோட்டத்தில் வளர்க்க வேண்டிய
மரத்தைத் தொட்டியில் வளர்க்கிறான். அது மீறி வளர்ந்து தொட்டியை உடைத்து
விடாதபடி அதை அப்போதைக்கப்போது வெட்டி விட்டு, தன்னுடைய பிடியை மீறி
விடாதபடி அரசை முதலாளித்துவம் கட்டுக்குள் வைத்துக் கொள்வதுபோல மரத்தைச்
செடியாக்கி வைத்துக் கொள்கிறான். அதற்குக் "குள்ள மரம்’ என்னும் நாமகரணம்
வேறு.ஒவ்வொரு நாளும் கழியும்போது தன் வாழ்வின் ஒரு பகுதி
தொடர்ந்து அறுபடுகிறது என்றும், நம்முடைய பயணம் ஒரு நாளைக்கு
அமெரிக்காவுக்கும் பிறிதொரு நாள் பிரான்சுக்கும் என்று நாம் எக்காளமிட்டு
மகிழ்ந்தாலும், விசா தேவைப்படாத தொடர்பயணம் மயானம் நோக்கியதுதான் என்று
நம்முடைய அறநூல்கள் வரையறுத்துச் சொன்னாலும் ஒவ்வோராண்டும் அறுபட்டுக்
குறைவதை பிறந்த நாளாகக் கொண்டாடிக் குதூகலிக்கிறதே நவீன காலத் தலைமுறை!

பிறப்பு
என்பது துயரம்; அது ஒருவகையில் செய்ததையே செய்வதுதானே! உண்டதையே
உண்கிறோம்; உடுத்ததையே உடுக்கிறோம்; உரைத்ததையே அடுத்தடுத்து 
உரைக்கிறோம்; கண்டதையே காண்கிறோம்; கேட்டதையே கேட்கிறோம்; சலிக்கவில்லையா
என்று கேட்பார் பட்டினத்தார்!"பிறப்பதற்கே தொழிலாகி
இறக்கின்றாரே’ என்பார் அப்பர். வான்புகழ் வள்ளுவனிலிருந்து கடைசி அறநூலான
ஆத்திசூடி வரை அனைத்துமே பிறவாப் பெருநெறிக்கு வழி சொல்ல எழுந்த
நூல்களாதலால், துயரத்துக்கு வித்திடும் பிறப்பைக் கொண்டாடும் பழக்கம்
தமிழனுக்கு இல்லை. ஆங்கிலவழிக் கல்வி நமக்குக் கற்பித்த ஒரு புதுவகைக்
கொண்டாட்டம் இது.புத்தன், வள்ளுவன், ஏசு, நபிகள் நாயகம்,
காந்தி ஆகியோரின் பிறப்பால் உலகம் மாற்றமுற்றது. ஆகவே இவர்களின் பிறப்பை
இவர்களையல்லாத மக்கள் கொண்டாடினார்கள். நம்முடைய பிறப்பால் நிகழ்ந்த
மாற்றம் என்ன? நாமே கொண்டாடிக் கொள்வது அசிங்கமாக இல்லையா?

ஐரோப்பியக் கலாசாரம் இன்னொரு கொண்டாட்டத்தையும் நமக்குக் கற்பித்திருக்கிறது. அது "திருமண நாள்’ கொண்டாட்டம்!வெள்ளைக்காரர்கள் மூன்றாம் திருமணநாள் என்று கொண்டாடுவதற்குக் காரணம் அடுத்த திருமணநாளை அந்த வெள்ளைக்காரி யாரோடு கொண்டாடுவாளோ?மூன்றாண்டு நீடித்ததே அதிசயம் என்பதால் வெள்ளைக்காரர்கள் கொண்டாட வேண்டியதுதான்!தமிழர்களின்
நிலை அதுவல்லவே. கட்டக் கடைசியில் அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்து,
விரித்த தலையோடு கூவிக் குரலெடுத்து அழுது, வாசல்வரை வந்து அவனை
அனுப்பிவிட்டு, எஞ்சிய காலமெல்லாம் அவன் தன்னைப் போற்றி வைத்துக் கொண்ட
நினைவுகளைச் சுமந்து கொண்டும், சுற்றியிருப்பவர்களிடம் சலிப்பில்லாமல்
சொல்லிக் கொண்டும் வாழ்கிற ஒரு தமிழ்ப்பெண் எதற்காகத் திருமணநாளைக்
கொண்டாட வேண்டும்? மூச்சு விடுகிற நினைவே இல்லாமல் நாம் மூச்சு
விட்டுக்கொண்டிருப்பதுபோல், இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தும்
பிணைந்தும் வாழும் நினைவே இல்லாமல் இயல்பாக வாழ்கிறவர்களுக்குத்
திருமணநாள் என்னும் பெயரில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?காலில்
வலி இருந்தால்தானே கால் நினைவுக்கு வரும்; தலை வலிக்கும்போதுதானே தலை
இருப்பதே நினைவு வரும். காலையும் தலையையும் தொட்டுப் பார்த்து ஒருமுறை
நினைத்துக் கொள்வோமே என்பது வேலையற்ற வேலைதானே!பிறந்தநாள் விழா, திருமணநாள் விழா என்று கொண்டாட்டங்களைக்கூட இரவல் வாங்கத் தொடங்கி விட்டார்களே தமிழர்கள்.

இவை
மட்டும்தானா? அழகிப் போட்டி வேறு நடத்துகிறார்கள். இந்திய அழகி,
தமிழ்நாட்டு அழகி, சென்னை அழகி, வேலூர் அழகி, வந்தவாசி அழகி என்று ஊர்
ஊருக்கு அழகிகள் தேர்வுகளும் அறிவிப்புகளும் நடக்கின்றன.ஒரு
கடைக்காரனிடம் போய் ஒரு குறிப்பிட்ட வார இதழின் பெயரைச் சொல்லி,
"இருக்கிறதா?’ என்று கேட்டால், "அது எதுக்கு சார்? அது பழசு; நாளைக்குப்
புதுசு வந்துவிடும்; காலையில் வாருங்கள்; தருகிறேன்’ என்கிறான்.போன
வார இதழ் இந்த வாரம் வெறும் எடை மதிப்பை அடைந்து விடுவதைப்போல, சென்ற
ஆண்டு அழகி இந்த ஆண்டு தள்ளுபடி நிலைக்குப் போய் விடுகிறாள். இது என்ன
அழகு?தமிழர்கள் அழகைப் போற்றத் தெரியாதவர்களில்லை. "நலம்
புனைந்து உரைத்தல்’ என்று பெண்ணின் அழகைப் போற்றத் தனித்துறையையே
வகுத்துக் கொண்டவர்கள் அவர்கள்.

ஒரு பெண் ஊருணியில் தண்ணீர்
குடிப்பதற்காகக் குனிந்து, இரு கைகளாலும் மொண்டு நீரைக் குடிப்பதற்காக
முகத்தருகே கொண்டு போனாள். அந்த நீரில் மீன்கள் துள்ளுவதைப் பார்த்து,
"ஐயய்யோ’ என்று கூவிக் கொண்டே கைகளை உதறினாள். கரையில் மீன்களைக் காணாமல்
திகைத்து நின்றாள் என்று ஒரு பெண்ணின் கண்களை மீன்களாகப் போற்றுகிறது
விவேக சிந்தாமணி.ஓர் அழகி, ஓர் இளம்பெண் என்று
பொதுமைப்படுத்தி நலம் பாராட்டுவதுதான் தமிழர்களின் இயல்பே அன்றி, ஒரு
குறிப்பிட்ட பெண்ணை, அவளை "இன்னாள்’ என்று பெயர் சுட்டி, அவளுடைய
வடிவத்தை, அதன் வளைவு நெளிவுகளை, ஏற்ற இறக்கங்களை பாராட்டுவது தமிழர்களின்
பண்பு இல்லை.""உன்னுடைய அகன்ற மார்பைப் பல பெண்களின் கண்கள்
உண்கின்றன; நீ பரத்தன்; பொதுப் பொருளான உன் மார்பை நான் புல்லேன்” என்று
சண்டைக்குப் போகும் தலைவியை நமக்குக் காட்டுகிறான் பேரறிவாளன் வள்ளுவன்
(1311). அது ஒரு பெண் ஊடலுக்குப் படைத்துக் கொண்ட கற்பனைதான் என்றாலும்
தனக்கு மட்டுமே உரித்தானவனாகவும், உரித்தானவளாகவும் இருக்க வேண்டும்
என்பதுதான் தமிழர்களின் காதல் வாழ்வின் அடிப்படை.அதே பல
பெண்களை மேடையிலே நிறுத்தி, ஒவ்வொருத்தியையும் உறுப்புவாரியாகப் பலரும்
ஆராய்ந்து மதிப்பெண் போட்டு, "இவள்தான் சென்னை அழகி’ என்று
அறிவிக்கப்படுவதைத் தமிழ்நாட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது?"ஹ்ர்ன்ழ்
ஜ்ண்ச்ங் ண்ள் க்ஷங்ஹன்ற்ண்ச்ன்ப்’ என்றால் வெள்ளைக்காரன், "பட்ஹய்ந்
ஹ்ர்ன்’ என்பான்! தமிழன் காலில் போட்டிருப்பதைக் கழற்றி அடிப்பான்! அந்த
நிலைகளெல்லாம் தகர்ந்து வருகின்றனவே. தமிழனுக்கு வந்திருக்கும் நோய்தான்
என்ன?

ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணை நடுவே வைத்து
முன்னும் பின்னும் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். கேட்டால்
நட்பு என்கின்றனர். இரண்டு பேருக்கும் நட்பு; அதனால்தான் நடுவில்
அமர்கிறாள்!கண்ணகி தன் உயிருக்கு உயிரான கணவனை "நண்பன்’ என்கிறாள். "நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கி’ (சிலம்பு-துன்பமாலை 38)""உடன்பிறந்தாள்
உடனாயினும் ஒரு வீட்டில் தனித்திருக்க நேரிடின் அதைத் தவிர்த்து விடுக”
என்று அறிவுரை கூறும் ஆசாரக்கோவை அதற்குக் காரணமாக ""ஐம்புலனும் தாங்கற்கு
அரிதாகலான்” (65) என்று வரம்பு கட்டுகிறது!அதியமானும்
ஒளவையும் பால் வேறுபாடுகளைக் கடந்து நண்பர்களாய் விளங்கி இருக்கிறார்கள்.
அறிவு முதிர்ச்சி, வயது இரண்டும் அந்த நட்பு திரிந்து போகாமைக்கான
காரணங்கள்.இவள்தான் காற்சட்டையும், "கர்ர்ந் ம்ங்’ என்று அச்சடிக்கப்பட்ட பனியனும்தான் பெண் விடுதலையின் அடையாளங்கள் என்றல்லவா நினைக்கிறாள்.இதிலே "பறக்கும் முத்தங்கள்’ வேறு! உதடு பொருந்தாதவை எப்படி இனியவையாய் அமையும்! எல்லாமே ஒரு பாவனைதானே! பாசாங்குதானே! போலிதானே!

ஆளுகின்றவன் போலி; அதிகாரி போலி; சாமியார்கள் போலி; பழக்கவழக்கங்கள் போலி; பண்பாடு போலி; அனைத்துமே போலி!இரண்டாயிரம்
ஆண்டுகளாகக் கருதிக் கருதி உருவாக்கப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்ட
அடிப்படைகள் தகரும்போது, எல்லா மட்டங்களிலும் அந்தத் தகர்வு பிரதிபலிப்பது
இயற்கைதானே!காலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s