கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்துல 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர். ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும். தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.